என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை"
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி சென்றனர்.
தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான சுப. உதயகுமார் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், கோட்டார் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர், தூத்துக்குடி செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறினர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டார். இதுபோல பச்சை தமிழகம் அமைப்பின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியும் கைது செய்யப்பட்டார். ஆரல்வாய் மொழியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சங்கரபாண்டியை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
* 1992- குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.
* 1.8.1994- தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.
* 14.10.1996- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.
* 23.11.1998- ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.
* 23.3.2013- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நல குறைவுகள் ஏற்பட்டன.
* 29.3.2013- இந்த தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் ஜெயலலிதா உத்தரவு.
* 2.4.2013- உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது.
* 31.5.2013- தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
* 12.2.2018- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
* 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
* 23.5.2018- தூத்துக்குடி பொது மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகே போலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் உயிரிழப்பு. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.
* 28.5.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
* 22.6.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.
* 15.12.2018- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
* 2.1.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
* 18.2.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. #ThoothukudiSterlite
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3 வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.
எனவே, விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. #SterliteProtest #NGT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த மே மாத 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.
இதை தொடர்ந்து அரசின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனிடையே ஆலையில் அமிலங்கள் வைக்கப்பட்ட குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு உத்தரவுப்படி உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு ஆலையில் உள்ள ரசாயனங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அமிலங்கள், பெட்ரோலிய பொருட்கள் அகற்றும் பணி கடந்த ஜூலை 2-ந்தேதி தொடங்கியது.
அப்போது கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோ புரோபைல் ஆல்கஹால், பெட்ரோலியம் பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இந்த ரசாயன பொருட்கள் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை சுமார் 90 சதவீதம் அகற்றப்பட்டன. தாமிரதாது, ஜிப்சம், ராக்பாஸ்பேட் மட்டும் அதிக அளவில் உள்ளன.
இதனால் முழுமையாக அகற்றப்படவில்லை. அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 30-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மற்றொரு உத்தரவில், குழுவின் மேற்பார்வையில் ரசாயன பொருட்களை அகற்றலாம் என்ற உத்தரவு வந்தது.
தற்போது ஆலையில் உள்ள அனைத்து அமிலங்களும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. ராக்பாஸ்பேட், தாமிரதாது, ஜிப்சம் ஆகியவை உள்ளன. இதில் தாமிரதாது 90 ஆயிரம் டன் உள்ளது. இந்த தாதுவில் 30 சதவீதம் கந்தகம் இருக்கும். இதில் 10 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். இந்த ஈரப்பதம் குறைந்தால், தாமிரதாது தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தாமிரதாதுவை அகற்ற முடிவு செய்தனர்.
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாமிர தாதுவை அகற்றுவதற்கான அனுமதி கொடுக்கலாம் என்று உத்தரவு வந்தது. அதன்படி தாமிர தாதுவை அகற்றுவதற்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இதையடுத்து தாமிரதாது அகற்றும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று தொடங்கின. தாமிர தாதுக்களை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதே போன்று 4 லட்சம் டன் ஜிப்சத்தையும் அகற்ற திட்டமிட்டுள்ளனர். தாமிரதாது வாங்கியவர்களிடமோ, தாமிர தாதுவை பயன்படுத்தும் வேறு நிறுவனத்திடமோ கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. #ThoothukudiSterlite
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி அதை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த மே மாதம் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மீண்டும் ஆலையை திறக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் நாடி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார்.
இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண்அகர்வாலை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். அவர்களுக்கு சென்னை கலஸ் மகாலில் அலுவலகம் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த குழுவினர் தூத்துக்குடிக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களையும் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை பற்றி விசாரிக்க உள்ளனர். அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நேரில் ஆய்வு செய்த பிறகு தருண்அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தயாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும். 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணை குழு நடவடிக்கைகளை ஏற்க இயலாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. தருண்அகர்வால் குழுவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதிக்குமா? என்பது அப்போது தெரிய வரும். #Sterlite #SterliteCase
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத்திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ந் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.
அந்த ஆணையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.
அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்தில் இருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைதான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியை யும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே, சுற்றுச் சூழல் துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
சென்னை:
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையால் ஆலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து என தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பயம் காரணமாகவே வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றன. 2013-ம் ஆண்டு சட்ட ரீதியாக பெறப்பட்ட அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடிநீர் மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#Thoothukudisterlite #Sterliteprotest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 18-ந் தேதி தொடங்கி 7 நாட்களாக 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆலையில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு (எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆலையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு விவரம் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு அரசு உத்தரவிட்டது. இந்த ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன் மற்றும் தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று ஆலையில் மீண்டும் ஆய்வு செய்தனர். இதையடுத்து ரசாயனங்களை அகற்றும் பணிநேற்று மாலை தொடங்கப்பட்டது. ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஜெனரேட்டர் மூலமே மின்வசதி செய்யப்பட்டு ரசாயனங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று 2-வது நாளாக கந்த அமிலம் மற்றும் மற்ற ரசாயனங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
டேங்கர் லாரிகள் கிடைக்காததால் காலையில் பணிகள் சற்று தாமதமானது. இதையடுத்து கூடுதலாக டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு ரசாயனங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிக்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளியேற்றப்படும் ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் அவர்களிடம் இருந்து ஏற்கனவே பொருட்களை வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இதற்கான செலவுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து கடந்த 16-ந் தேதி மாலை ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் குழுவை அனுப்பி ரசாயன கசிவை உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஆலையில் இருந்து கசிவான 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 17-ந் தேதி கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது.
டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு சேலம், கோவை பகுதியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. நேற்று மாலை வரை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலமாக 900 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையில் டேங்கர் லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. காலையில் 5க்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை நிரப்பி சென்றன. இன்று பிற்பகலில் கந்தக அமிலம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் ஆலையில் இருந்து வெளியேறினார்கள். தொடந்து ஆலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் மற்றும் பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையிலான குழு மூலமாக ரசாயன கசிவை உறுதி செய்தார். குடோனில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் கசிவாகி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை குடோனில் இருந்து கசிவான கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தன. பிரத்யேக பாதை மூலமாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நிபுணர் குழு மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை 15 டேங்கர் லாரிகள் மூலம், சுமார் 350 டன் எடையுள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது. நேற்று மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் மேலும் 100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.
அகற்றப்பட்ட கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இன்று காலையில் மேலும் 5 லாரிகள் ஆலைக்குள் சென்றன. அந்த லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் உடனுக்குடன் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முழுமையாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என்றார். #Sterlite #Sulfuricacid
மதுரை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எனது கணவருக்கும், மகன்களுக்கும் இந்த சம்பவங்களில் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளனர். இதனால் எனது மகன்கள் 2 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நசீபா பானு சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் கணேஷ்பிரபு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.
மேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியுமான காளியப்பன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்ற போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
6 பேர் கைது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்வது கலெக்டர் அலுவலகம். அப்படிப்பட்ட இடத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை என்றனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மருது கூறுகையில், கலில்ரகுமான் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் போலீசார் 2 மகன்களுடன் அவரை கைது செய்து இருப்பது தவறான நடவடிக்கை ஆகும் என்றார். #Thoothukudifiring #SterliteProtest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்